268. தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய
மன்னுயி ரெல்லாந் தொழும்.
பொருள்:
தவ வலிமையால் தன்னுடைய உயிர், தான் என்னும் பற்று நீங்கப் பெற்றவனை மற்ற உயிர்கள் எல்லாம் (அவனுடைய பெருமையை உணர்ந்து) தொழும்.
- மு.வரதராசனார் உரை
தன் உயிர் தான் அறப்பெற்றானை - தன் உயிரைத் தான் தனக்கு உரித்தாகப் பெற்றவனை, ஏனைய மன் உயிர் எல்லாம் தொழும் - பெறாதனவாகிய மன் உயிர்கள் எல்லாம் தொழும். (தனக்கு உரித்தாதல் - தவம் ஆகிய தன் கருமம் செய்தல். அதனின் ஊங்குப் பெறுதற்கு அரியது இன்மையின், 'பெற்றானை' என்றார். 'அது பெறாதன' என்றது ஆசையுட் பட்டு அவம் செய்யும் உயிர்களை. சாபமும் அருளும் ஆகிய இரண்டு ஆற்றலும் உடைமையின் 'தொழும்' என்றார்.).
- பரிமேலழகர் உரை