Pages

Tuesday, September 24, 2013

திருக்குறள் 244 - துறவறவியல்

4. மன்னுயிர் ஓம்பி அருள்ஆள்வாற்கு இல்லென்ப
தன்உயிர் அஞ்சும் வினை.








பொருள்:

தன் உயிரின் பொருட்டு அஞ்சி வாழ்கின்ற தீவினை, உலகில் நிலைபெற்றுள்ள மற்ற உயிர்களைப் போற்றி அருளுடையவனாக இருப்பவனுக்கு இல்லை. - மு.வரதராசனார் உரை


மன்உயிர் ஓம்பி அருள் ஆள்வாற்கு - நிலைபேறுடைய உயிர்களைப் பேணி அவற்றின்கண் அருளுடையன் ஆவானுக்கு, தன் உயிர் அஞ்சும் வினை இல் என்ப - தன் உயிர் அஞ்சுதற்கு ஏதுவாகிய தீவினைகள் உளவாகா என்று சொல்லுவர் அறிந்தோர். (உயிர்கள் எல்லாம் நித்தம் ஆகலின், 'மன் உயிர்' என்றார். அஞ்சுதல்- துன்பம் நோக்கி அஞ்சுதல். அன்ன அறத்தினோன் கொலை முதலிய பாவங்கள் செய்யான் எனவே மறுமைக்கண் நரகம் புகாமைக்கு ஏது கூறியவாறாயிற்று.) - பரிமேலழகர் உரை