261. உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண்
செய்யாமை அற்றே தவத்திற் குரு
செய்யாமை அற்றே தவத்திற் குரு
பொருள்:
தான் பெற்ற துன்பத்தைப் பொறுத்தலும் மற்ற உயிர்களுக்குத் துன்பம் செய்யாதிருத்தலும் ஆகியவைகளே தவத்திற்கு வடிவமாகும்.
- மு.வரதராசனார் உரை
[அஃதாவது, மனம் பொறி வழி போகாது நிற்றற் பொருட்டு விரதங்களான் உண்டி சுருக்கலும், கோடைக்கண் வெயில்நிலை நிற்றலும், மாரியினும் பனியினும் நீர்நிலை நிற்றலும் முதலிய செயல்களை மேற்கொண்டு, அவற்றால் தம் உயிர்க்கு வரும் துன்பங்களைப் பொறுத்துப் பிற உயிர்களை ஓம்புதல்,புலான் மறுத்து உயிர்கண்மேல் அருள் முதிர்ந்துழிச் செய்யப்படுவது ஆகலின், இது புலால் மறுத்தலின்பின் வைக்கப்பட்டது.)
தவத்திற்கு உரு-தவத்தின் வடிவு; உற்ற நோய் நோன்றல் உயிர்க்கு உறுகண் செய்யாமை அற்றே - உண்டி சுருக்கல் முதலியவற்றால் தம் உயிர்க்கு வரும் துன்பங்களைப் பொறுத்தலும், தாம் பிற உயிர்கட்குத் துன்பம் செய்யாமையும் ஆகிய அவ்வளவிற்று (மற்றுள்ளன எல்லாம் இவற்றுள்ளே அடங்குதலின், 'அற்றே,' எனத் தேற்றேகாரம் கொடுத்தார். 'தவத்திற்கு உரு அற்று' என்பது, 'யானையது கோடு கூரிது' 'என்பதனை,' யானைக்குக் கோடு கூரிது, என்றாற்போல ஆறாவதன் பொருட்கண் நான்காவது வந்த மயக்கம் இதனால் தவத்தினது இலக்கணம் கூறப்பட்டது.).
- பரிமேலழகர் உரை