Pages

Friday, October 4, 2013

திருக்குறள் 245 - துறவறவியல்

5. அல்லல் அருளாள்வார்க் கில்லை வளிவழங்கும்
மல்லல்மா ஞாலம் கரி.








பொருள்:

அருளுடையவராக வாழ்கின்றவர்க்குத் துன்பம் இல்லை; காற்று இயங்குகின்ற வளம் பொருந்திய பெரிய உலகத்தில் வாழ்வோரே இதற்குச் சான்று ஆவர்.. - மு.வரதராசனார் உரை


அருள் ஆள்வார்க்கு அல்லல் இல்லை - அருளுடையார்க்கு இம்மையினும் ஒரு துன்பம் உண்டாகாது, வளி வழங்கும் மல்லல்மா ஞாலம் கரி - அதற்குக் காற்று இயங்குகின்ற வளப்பத்தை உடைய பெரிய ஞாலத்து வாழ்வார் சான்று. ( சான்று ஆவார் தாம் கண்டு தேறிய பொருளைக் காணாதார்க்குத் தேற்றுதற்கு உரியவர். அருள் ஆள்வார்க்கு அல்லல் உண்டாக ஒரு காலத்தும் ஒருவரும் கண்டறிவார் இன்மையின், இன்மை முகத்தான் ஞாலத்தார் யாவரும் சான்று என்பார். 'வளி வழங்கும் மல்லல் மாஞாலம் கரி' என்றார். எனவே, இம்மைக்கண் என்பது பெற்றாம். 'ஞாலம்' ஆகு பெயர். இவை மூன்று பாட்டானும் அத்துணையுடையார்க்கு இருமையினும் துன்பம் இல்லாமை கூறப்பட்டது.) - பரிமேலழகர் உரை