Pages

Wednesday, October 9, 2013

திருக்குறள் 250 - துறவறவியல்

10. வலியார்முன் தன்னை நினைக்க,தான் தன்னின்
மெலியார்மேல் செல்லும் இடத்து.








பொருள்:

(அருள் இல்லாதவன்) தன்னைவிட மெலிந்தவர்மேல் துன்புறுத்தச் செல்லும்போது, தன்னைவிட வலியவரின் முன் தான் அஞ்சி நிற்கும் நிலைமையை நினைக்க வேண்டும். - மு.வரதராசனார் உரை


வலியார் முன் தன்னை நினைக்க - தன்னின் வலியார் தன்னை நலிய வரும்பொழுது அவர்முன் தான் அஞ்சிநிற்கும் நிலையினை நினைக்க, தான் தன்னின்மெலியார்மேல் செல்லுமிடத்து - அருளில்லாதவன் தன்னின் எளியார்மேல் தான் நலியச் செல்லும் பொழுது. ('மெலியார்' எனச் சிறப்புடைய உயர்திணைமேல் கூறினாராயினும், ஏனைய அஃறிணையும் கொள்ளப்படும். அதனை நினைக்கவே, இவ்வுயிர்க்கும் அவ்வாறே அச்சம் ஆம் என்று அறிந்து, அதன்மேல் அருள் உடையன் ஆம் என்பது கருத்து. இதனால் அருள் பிறத்தற்கு உபாயம் கூறப்பட்டது.)  - பரிமேலழகர் உரை

Tuesday, October 8, 2013

திருக்குறள் 249 - துறவறவியல்

9. தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்
அருளாதான் செயயும் அறம்.








பொருள்:

அருள் மேற்கொள்ளாதவன் செய்கின்ற அறச்செயலை ஆராய்ந்தால், அஃது அறிவு தெளியாதவன் ஒரு நூலின் உண்மைப் பொருளைக் கண்டாற் போன்றது.. - மு.வரதராசனார் உரை


அருளாதான் செய்யும் அறம் தேரின் - உயிர்கள் மாட்டு அருள் செய்யாதவன் செய்யும் அறத்தை ஆராயின், தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்று - ஞானம் இல்லாதவன். ஒருகால் மெய்ப்பொருளை உணர்ந்தாற் போலும். (மெய்ப்பொருள் - மெய்ந்நூலில் சொல்லும் பொருள். நிலை பெற்ற ஞானம் இல்லாதவன் இடையே மெய்ப்பொருளை உணர்ந்தால் அதனைத் தன்ஞானம் இலாமையால் தானே அழித்துவிடும் : அது போல அருளாதான் இடையே அறஞ்செய்தால் அதனைத் தன் அருளாமையால் தானே அழித்து விடும் என்பது ஆயிற்று: ஆகவே, பிற அறங்கட்கெல்லாம் அருள் உடைமை மூலம் என்பது பெற்றாம். இவை நான்கு பாட்டானும் அத்துணை இல்லாதார்க்கு வரும் குற்றம் கூறப்பட்டது.) - பரிமேலழகர் உரை

Monday, October 7, 2013

திருக்குறள் 248 - துறவறவியல்

8. பொருள்அற்றார் பூப்பர் ஒருகால் அருள்அற்றார்
அற்றார்மற்று ஆதல் அரிது.








பொருள்:

பொருள் இல்லாதவர் ஒரு காலத்தில் வளம் பெற்று விளங்குவர்; அருள் இல்லாதவர் வாழ்க்கையின் பயன் அற்றவரே; அவர் ஒரு காலத்திலும் சிறந்து விளங்குதல் இல்லை. - மு.வரதராசனார் உரை


பொருள் அற்றார் ஒருகால்பூப்பர்- ஊழான் வறியராயினார் அது நீங்கிப் பின் ஒரு காலத்துச் செல்வத்தால் பொலிவர், அருள் அற்றார் அற்றார் மற்று ஆதல் அரிது - அவ்வாறு அன்றி அருளிலாதார் பாவம் அறாமையின் அழிந்தாரே; பின் ஒருகாலத்தும் ஆதல் இல்லை. ( 'மற்று' வினைமாற்றின்கண் வந்தது, மேல் பொருள் இன்மையொடு ஒருவாற்றான் ஒப்புமை கூறினார் ஆகலின், அது மறுத்து, பிற ஆற்றான் அதனினும் கொடியது என்பது கூறியவாறு.) - பரிமேலழகர் உரை

Sunday, October 6, 2013

திருக்குறள் 247 - துறவறவியல்

7. அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு.








பொருள்:

பொருள் இலாதவர்க்கு இவ்வுலகத்து வாழ்க்கை இல்லாதவாறுபோல, உயிர்களிடத்தில் அருள் இல்லாதவர்க்கு அவ்வுலகத்து வாழ்க்கை இல்லையாம். - மு.வரதராசனார் உரை


அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை - உயிர்கள்மேல் அருள் இல்லாதார்க்கு வீட்டுலகத்து இன்பம் இல்லை, பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லாகியாங்கு - பொருள் இல்லாதார்க்கு இவ்வுலகத்து இன்பம் இல்லையாயினாற் போல. ( 'அவ்வுலகம், இவ்வுலகம்' என்பன ஆகுபெயர். இவ்வுலகத்து இன்பங்கட்குப் பொருள் காரணமானாற்போல அவ்வுலகத்து இன்பங்கட்கு அருள் காரணம் என்பதாயிற்று.) - பரிமேலழகர் உரை

Saturday, October 5, 2013

திருக்குறள் 246 - துறவறவியல்

6. பொருள் நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி
அல்லவை செய்துஒழுகு வார்.








பொருள்:

அருள் இல்லாதவராய் அறமல்லாதவைகளைச் செய்து நடப்பவர்களை, உறுதிப்பொருளாகிய அறத்திலிருந்து நீங்கித் தம் வாழ்க்கையின் குறிக்கோளை மறந்தவர் என்பர்.. - மு.வரதராசனார் உரை


அருள் நீங்கி அல்லவை செய்து ஒழுகுவார் - உயிர்கள் மாட்டுச் செய்யப்படும் அருளைத் தவிர்ந்து தவிரப்படும் கொடுமைகளைச் செய்து ஒழுகுவாரை, பொருள் நீங்கிப் பொச்சாந்தார் என்பர் - முன்னும் உறுதிப்பொருளைச் செய்யாது தாம் துன்புறுகின்றமையை மறந்தவர் என்று சொல்லுவர் நல்லோர். (உறுதிப்பொருள்: அறம், 'துன்புறுதல்' - பிறவித்துன்பம் மூன்றனையும் அனுபவித்தல். மறந்திலராயின், அவ்வாறு ஒழுகார் என்பது கருத்து.) - பரிமேலழகர் உரை

Friday, October 4, 2013

திருக்குறள் 245 - துறவறவியல்

5. அல்லல் அருளாள்வார்க் கில்லை வளிவழங்கும்
மல்லல்மா ஞாலம் கரி.








பொருள்:

அருளுடையவராக வாழ்கின்றவர்க்குத் துன்பம் இல்லை; காற்று இயங்குகின்ற வளம் பொருந்திய பெரிய உலகத்தில் வாழ்வோரே இதற்குச் சான்று ஆவர்.. - மு.வரதராசனார் உரை


அருள் ஆள்வார்க்கு அல்லல் இல்லை - அருளுடையார்க்கு இம்மையினும் ஒரு துன்பம் உண்டாகாது, வளி வழங்கும் மல்லல்மா ஞாலம் கரி - அதற்குக் காற்று இயங்குகின்ற வளப்பத்தை உடைய பெரிய ஞாலத்து வாழ்வார் சான்று. ( சான்று ஆவார் தாம் கண்டு தேறிய பொருளைக் காணாதார்க்குத் தேற்றுதற்கு உரியவர். அருள் ஆள்வார்க்கு அல்லல் உண்டாக ஒரு காலத்தும் ஒருவரும் கண்டறிவார் இன்மையின், இன்மை முகத்தான் ஞாலத்தார் யாவரும் சான்று என்பார். 'வளி வழங்கும் மல்லல் மாஞாலம் கரி' என்றார். எனவே, இம்மைக்கண் என்பது பெற்றாம். 'ஞாலம்' ஆகு பெயர். இவை மூன்று பாட்டானும் அத்துணையுடையார்க்கு இருமையினும் துன்பம் இல்லாமை கூறப்பட்டது.) - பரிமேலழகர் உரை